கொரோனாவால் குழந்தைகளுக்கு புதிய ஆபத்து: யுனிசெப் எச்சரிக்கை

லண்டன்: கொரோனா பரவி வருவதால், உலக நாடுகள் பலவும் குழந்தைகளுக்கான தடுப்பூசிகள் திட்டத்தை ஒத்தி வைத்துள்ளதால், கோடிக்கணக்கான குழந்தைகளுக்கு பெரும் ஆபத்து ஏற்படும் என யுனிசெப் எச்சரித்துள்ளது.


இதுகுறித்து ஐ.நா., சபையின் அங்கமான யுனிசெப் கூறியதாவது: உலகம் முழுவதும் 2018ம் ஆண்டு முதல் 1.30 கோடிக்கும் அதிகமான குழந்தைகளுக்கு தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கடந்த 2010 - 18ம் ஆண்டுக்கு இடையே, சராசரியாக, ஆண்டுக்கு 2.03 கோடி குழந்தைகள், தட்டம்மை போலியோ உள்ளிட்ட தடுப்பூசி தவணைகளை தவறவிட்டுள்ளனர்.


தற்போது கொரோனா பரவலால் அது மேலும் மோசமடையும் சூழல் ஏற்பட்டுள்ளது. கோடிக்கணக்கான குழந்தைகள், அம்மை, டிப்தீரியா, போலியோ தடுப்பூசிகளை இழக்கும் அபாயம் உருவாகி உள்ளது. பெரும்பாலான நாடுகள் போலியோ சொட்டு மருந்து முகாம்களையும், தட்டம்மை தடுப்பூசி முகாம்களையும் ஒத்தி வைத்துள்ளன. கொரோனா கட்டுக்குள் வந்தாலும், தட்டம்மை, டிப்தீரியா, போலியோ உள்ளிட்டவை உலக நாடுகளில் பரவி, கோடிக்கணக்கான குழந்தைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். இவ்வாறு யுனிசெப் எச்சரித்துள்ளது.