தெலுங்கானா அரசின் நடவடிக்கை ; முதல்வருக்கு விஜய் தேவரகொண்டா நன்றி

ஐதராபாத் : தெலுங்கானா மக்களின் நலனுக்காக சிக்கலான காலங்களில் அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்காக முதல்வர் சந்திரசேகர ராவுக்கு நடிகர் விஜய் தேவரகொண்டா நன்றி கூறினார்.


கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் கொரோனாவின் பாதிப்பு தொடர்ந்து வருகிறது. தெலுங்கானாவில் நோயை கட்டுப்படுத்த மாநில அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா இது தொடர்பாக இன்று (ஏப்.,26) வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது : தெலுங்கானாவில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் சிக்கலான நேரங்களில் மாநில அரசு சிறப்பாக பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறது. ஏழை , எளிய மக்களுக்கு உணவு போன்ற அத்தியாவசிய தேவைகளை வழங்குகிறது. நோய் பாதித்தவர்களுக்கு மருத்துவ உபகரணங்களும் வழங்க நடவடிக்கை எடுத்த முதல்வர் சந்திரசேகர ராவுக்கு நன்றி கூறுகிறேன். வெள்ளை கார்டு வைத்திருப்பவர் களுக்கும் பணம் கொடுக்க நடவடிக்கை எடுத்தது குறிப்பிடத்தக்கது. ஏழை எளியவர்களிடம் வீட்டு வாடகை வாங்க கூடாது எனவும் முதல்வர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கடுமையாக உழைத்து வருகின்றன. எங்கள் தெலுங்கு பிரபலங்களும் தொழில்துறையில் உள்ள சினிமா தொழிலாளர்களை மீட்க ஒன்றிணைந்துள்ளனர்.



 


கொரோனாவுக்கு பலரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். நாங்கள் இதற்கு மனதளவிலும், நிதி ரீதியாகவும் தயாராகவில்லை. இது புதியதல்ல. பலமுறை இதுபோன்ற பல சிக்கல்களை சந்தித்துள்ளேன். ஆனால் எனது தயாரிப்பு இல்லம் மற்றும் அறக்கட்டளை நடவடிக்கைகளில் பணிபுரியும் எனது ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கும் சூழ்நிலையை கையாள்வது எனக்கு புதியது. நான் அமைதியற்றவனாக உணர்கிறேன், என் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன்.



வேலைவாய்ப்பு உருவாக்கம்


தெலுங்கானா தேவரகொண்டா அறக்கட்டளை மூலம் 1 வருடத்திற்கு முன் சிறியதாக வேலைவாய்ப்பு தொடர்பாக இயக்கம் தொடங்கப்பட்டு பலருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது. அவர்களில் சிலருக்கு கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து சலுகைக் கடிதங்கள் கிடைத்தன, மேலும் பல தடைகள் நீக்கப்பட்டவுடன் பலரும் பெற வாய்ப்புள்ளது.மேலும் தெலுங்கானாவில் உள்ள நடுத்தர குடும்பங்களில் உள்ளவர்களுக்கு தேவையான மளிகை மற்றும் காய்கறிகள் போன்றவற்றை அருகில் உள்ள பல்பொருள் அங்காடியில் பெற்று கொள்ளலாம். அதற்கும் டிடிஎப்( தேவரகொண்டா அறக்கட்டளை) நிதி செலுத்தும். இதற்காக டி.டி.எஃப் குழு மக்களைச் சென்றடைவதற்கும் மளிகைக் கடைகளுக்கு பணம் செலுத்துவதற்கும் ஒரு தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது. இதற்காக ரூ 1.30 கோடி நிதி செலவிடப்படுகிறது. இவ்வாறு கூறினார்.